வரி செலுத்தாமல் இயக்கிய 61 வாகனங்கள் பறிமுதல்
நீலகிரி மாவட்டத்தில் வரி செலுத்தாமல் இயக்கிய 61 வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வரி செலுத்தாமல் இயக்கிய 61 வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வரி செலுத்தவில்லை
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகமும், கூடலூரில் கூடுதல் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு மாதந்தோறும் சராசரியாக 400 இருசக்கர வாகனங்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதத்துக்கான வரி செலுத்தாமலும், தகுதி சான்று பெறாமலும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் விஜயா மற்றும் முத்துசாமி ஆகியோர் ஊட்டி சுற்றுவட்டார பகுதியிலும், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் குமார் கூடலூரிலும் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
61 வாகனங்கள் பறிமுதல்
அப்போது ஜூன் மாதம் முதல் தற்போது வரை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட இலகு ரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 50 வாகனங்கள் உடனடியாக வரி செலுத்திய நிலையில் விடுவிக்கப்பட்டன. மீதமுள்ள 11 வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறும்போது, தற்போது நடந்த தணிக்கையில் 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தியவர்களுக்கு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 50 வாகன உரிமையாளர்களிடம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 985 வரி வசூலிக்கப்பட்டது என்றார்.