61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவு: மீன்பிடிக்க தயார் நிலையில் விசைப்படகுகள்

ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை படத்தில் காணலாம்.

Update: 2024-06-14 03:49 GMT

ராமேசுவரம்,

தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது .இதையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது.ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த 2 மாதமாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த சமயத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி, மராமத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

61 நாள் மீன்பிடி தடைக்கால சீசன் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் ராமேசுவரம் துறைமுகம் கடல் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த படகுகள் வர்ணம் பூசப்பட்டும், பதிவு எண் எழுதப்பட்டும் புதுப்பொலிவுடன் காட்சி தந்தன.படகுகளில் மீன்பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், டீசல் உள்ளிட்ட உபகரணங்களை மீனவர்கள் ஏற்றினர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறியதாவது:-

2 மாத தடைக்கால சீசன் முடிந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளனர். மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால், நண்டு உள்ளிட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்று வரும்போது ஏற்றுமதி நிறுவனங்கள் விலையை குறைத்து விடுகின்றனர். இந்த ஆண்டும் அதே நிலை இல்லாமல் இறால் மற்றும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நல்ல விலையை நிர்ணயிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 2 மாதத்திற்கு பிறகு மீன்பிடிக்க செல்ல உள்ளதால் கணிசமாக மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மீன்பிடி தடைக்காலத்தில் பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் பிடித்து வந்த மீன்கள் மட்டுமே விற்பனை்க்கு வந்தன. இனி விசைப்படகுகள் கடலுக்கு செல்வதால் மீன்கள் வரத்து அதிகமாக இருக்கும். இது மீன்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்