அதிகாரி உள்பட 10 போலீசார் மீது 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்-சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை

நெல்லை அருகே போலீசார் தாக்குதலில் 2 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி போலீஸ் அதிகாரி உள்பட 10 போலீசார் மீது 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Update: 2023-04-12 20:32 GMT

நெல்லை அருகே போலீசார் தாக்குதலில் 2 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி போலீஸ் அதிகாரி உள்பட 10 போலீசார் மீது 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

2 பேர் சாவு

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மருதூரை சேர்ந்த முருகேசன், வாகைகுளத்தை சேர்ந்த மாணிக்கராஜ் ஆகியோர் இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால், போலீஸ் தாக்குதலில் தான் 2 பேரும் இறந்ததாகவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். கோர்ட்டுகளில் வழக்கும் தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தனர். அதில், போலீஸ் தாக்குதலில் தான் 2 பேரும் இறந்தது தெரியவந்தது.

குற்றப்பத்திரிகை

இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு திருவேணி முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், 600 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதாவது, அப்போதைய தாைழயூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரதாப், கருத்தையா, அசோகன் மற்றும் போலீசார் கண்ணன், சாகர், ேஜான்ஸ், சுதாகர், வேல்பாண்டி ஆகிய 10 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் ஏற்கனவே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

போலீசாருக்கு உதவி

போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்று நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் தலைவர் மகாராஜன் தலைமையில் நெல்லை கோர்ட்டு முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார்கள்.

பின்னர் மகாராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீண்ட சட்ட போராட்டங்களுக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்தும், சில சம்பவங்கள், ஆவணங்களை மறைத்தும், இறந்து போன சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மீது முழு பழியையும் சுமத்தி சட்டப்பிரிவுகளை குறைத்து போலீசாருக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் உதவி உள்ளனர்.

முழுமையாக விசாரணை நடத்தி...

இந்த சம்பவத்தில் முழுமையாக விசாரணை நடத்தி அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் யாருக்கெல்லாம் ஆதரவாக இருக்கிறார்கள் என்ற விவரங்கள் எங்களிடம் உள்ளது. அதற்கான வீடியோ ஆதாரம் விரைவில் வெளியிடப்படும்.

அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் குற்றம் சாட்டப்பட்ட 21 பேர்களின் பற்களை பிடுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவின் விசாரணை காலம் தாழ்ந்ததாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்