ெரயிலில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ெரயிலில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்
அரக்கோணம் வழியாக செல்லும் பல ரெயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரக்கோணம் ரெயில்வே போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணம் மற்றும் திருத்தணி மார்கத்தில் செல்லும் ரெயில்களில் ஏறி சோதனை செய்தனர்.
சென்னையில் இருந்து திருப்பதியை நோக்கி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயிலில் ஏறி போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அதில் 200 கிலோ எடையிலான ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசிைய போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து திருத்தணி ரெயில் நிலையத்திலும் போலீசார் சோதனை செய்தனர். அதில் 400 கிலோ எடையிலான ரேஷன் அரிசியை ரெயிலில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து 400 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட திருத்தணி மற்றும் ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்தவர்களான சரோஜா, மோகனா மற்றும் கீதா ஆகியோர் மீது அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.