காரில் கடத்திய 60 கிலோ குட்கா பறிமுதல்

Update: 2023-06-04 19:43 GMT

ஓமலூர்:-

பெங்களூருவில் இருந்து ராஜபாளையத்திற்கு காரில் கடத்திய 60 கிலோ குட்காவை தீவட்டிப்பட்டி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காரில் குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் குட்கா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் டிரைவர் மற்றும் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கைது -பறிமுதல்

அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் விஷால்ராஜ் (வயது 24), சூளகிரி டேம் ரோடு பகுதியை சேர்ந்த கோபால் மகன் கோதண்டராமையா (34), சூளகிரி சமரசனஅள்ளியை சேர்ந்த மனோகர் மகன் மஞ்சுநாத் (27) என்பது தெரிய வந்தது. இவர்கள் பெங்களூருவில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு காரில் குட்கா கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், டிரைவர் விஷால்ராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் காருடன் 60 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்