வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
கும்பகோணம் அருகே அண்ணன்- தம்பியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோா்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே அண்ணன்- தம்பியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோா்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.
வழிப்பறி
கும்பகோணம் அருகே உள்ள பாங்கல் முருக்கங்குடி ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவருடைய மகன் தவுபிக் (வயது20) கல்லூரி மாணவர். இவரது சகோதரர் அனாஸ் முகமது. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி தஞ்சாவூர்- கும்பகோணம் பைபாஸ் சாலையில் சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் உள்ள திருமலை ராஜன் ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கும்பகோணம் பேட்டை வினைதீர்த்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் மகன் சுபாஷ்( 25), அண்ணன்-தம்பியான தவுபிக், அனாஸ்முகமது ஆகியோரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை வழிப்பறி செய்துவிட்டு இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து சென்றார்.
6 ஆண்டுகள் சிறை
இது குறித்து அனாஸ் முகமது மற்றும் தவுபிக் ஆகிய இருவரும் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில்
போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.
இந்த வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுபாசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.