தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவு சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்

தியாகராய நகர் பள்ளி விடுதியில் சத்துமாவுடன் ‘பேன் எண்ணெய்' ஊற்றி சாப்பிட்ட 6 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2023-06-21 06:28 GMT

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அரசு உதவிபெறும் பிரபல பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியும் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து கடந்த 12-ந்தேதி பள்ளி திறக்கப்பட்ட நிலையில் விடுதியில் உள்ள மாணவர் ஒருவர் தனது வீட்டில் இருந்து சத்துமாவு கொண்டுவந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் அந்த மாணவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த சத்துமாவுடன், தேங்காய் எண்ணெய் ஊற்றி தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.

சத்துமாவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 6 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து, அருகில் இருந்த மாணவர்கள் பதறிப்போய் இதுகுறித்து விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சத்துமாவு கொண்டுவந்த மாணவனின் பெற்றோர், மாணவர் தலையில் 'பேன்' அதிகமாக இருந்ததால் தேங்காய் எண்ணெய் டப்பாவில் 'பேன்' எண்ணெய் ஊற்றிக்கொடுத்துள்ளனர். இதை தேங்காய் எண்ணெய் என்று நினைத்து மாணவர்கள் தவறுதலாக சத்துமாவில் கலந்து சாப்பிட்டதே வாந்தி, மயக்கத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாணவர்களின் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 6 மாணவர்களும் நேற்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை தேரியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்