6 சிவன் கோவில்கள் சாமியின் தீர்த்தவாரி

புதுக்கோட்டை பூசத்துறை வெள்ளாற்றில் 6 சிவன் கோவில்கள் சாமியின் தீர்த்தவாரி நடைபெற்றது.

Update: 2023-02-05 17:50 GMT

சிவன் கோவில்கள்

தைப்பூசத்தன்று புதுக்கோட்டை அருகே பூசத்துறை வெள்ளாற்றில் 7 ஊர்களில் உள்ள கோவில்கள் சாமியின் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவானது மன்னர்கள் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. ஆற்றின் ஒரு புறம் புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேசுவரர், சாந்தநாத சாமி உடனுறை வேதநாயகி அம்பாள், திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள், வெள்ளனூர் அகத்தீஸ்வரர் உடனுறை பிரகதாம்பாள் ஆகிய சாமிகளுக்கும், ஆற்றின் மறுபுறம் திருமயம் பகுதியில் இருந்து சத்தியகிரீஸ்வரர், வேணுவனேஸ்வரி அம்பாள், விராச்சிலை வில்வனேஸ்வரர் உடனுறை ரெட்தசவதாரி, கோட்டூர் கால பைரவர் உடனுறை சவுந்தரநாயகி அம்பாள் ஆகிய சாமிகளுக்கும் தீர்த்தவாரி நடைபெறும். இதில் வெள்ளனூர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த சில ஆண்டுகளாக அக்கோவில் சாமி மட்டும் தீர்த்தவாரிக்கு வருவதில்லை. அதனால் மற்ற 6 கோவில்களின் தீர்த்தவாரி நடைபெறும்.

தீர்த்தவாரி

இந்த நிலையில் தைப்பூசத்தையொட்டி பூசத்துறை வெள்ளாற்றில் நேற்று 6 சிவன் கோவில்களின் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், சாந்தநாத சாமி கோவில், திருவேங்கைவாசல் கோவிலில் இருந்து சாமி மற்றும் அம்பாள் புறப்பாடாகி வெள்ளாற்றின் கரையில் எழுந்தருளினர். அதேபோல திருமயம், விராச்சிலை, கோட்டூர் கோவிலில் இருந்து சாமி-அம்பாள் புறப்பாடாகி வந்தது.

ஆற்றில் இரு புறத்தின் கரையிலும் 6 கோவில்களின் சாமி-அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை காண வெள்ளாற்றில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தீர்த்தவாரியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் சாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கோவில்களுக்கு மீண்டும் திரும்பி புறப்பட்டன.

தண்ணீர் தெளிப்பு

தீர்த்தவாரியின் போது ஆற்றில் இருந்த தண்ணீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதேநேரத்தில் பக்தர்களும் ஆற்றில் இறங்கி தண்ணீரை தலையில் தெளித்துக்கொண்டனர். இந்த தீர்த்தவாரியில் இருபுற கரையில் இருந்த 6 சிவன் கோவில்களின் சாமியை ஒரே நேரத்தில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில்களின் ஊரைச்சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்ததால் ஆற்றின் கரையில் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வெள்ளாற்று பாலத்தின் மேல் பகுதியில் தண்டவாள பாதை சென்ற நிலையில், அதன் மேல் பக்தர்கள் யாரும் செல்லாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டயர் வெடித்தது

முன்னதாக திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் சாமி புறப்பாடாகி வந்த போது வண்டியில் ஒரு டயர் திடீரென வெடித்தது. அதன்பின் மாற்று டயர் பொருத்தப்பட்ட பின் புறப்பாடு நடைபெற்றது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமானது.

ஆலங்குடி

ஆலங்குடி அருகே சிக்கப்பட்டி கிராமத்தில் தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு டிராக்டரில் முருகப்பெருமானை வைத்து செட்டிகுளம் தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் முருகப் பெருமானுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. ஊர்வலத்தில் பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் முருகபெருமான் தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்தடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளம்

திருவரங்குளத்தில் அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக திருவிடையார்பட்டியில் திருமூலநாதர் சமேத திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அருேக உள்ள வெள்ளாற்றங்கரைக்கு வந்தனர். பின்னர் சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் புனிதநீராடினர். தொடர்ந்து இரவு பூவரசகுடியில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். பின்னர் அங்கு புராதன நாடகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பூவரசகுடி, வாண்டாகோட்டை, மணியம்பலம், திருவுடையார்பட்டி வட்டார பொதுமக்கள், விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள், இளைஞர்கள், மண்டக படிதாரர்கள் செய்திருந்தனர்.

அன்னவாசல்

அன்னவாசல் அருகே குமரமலையில் பாலதண்டாயுதபாணி மலைக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சேந்தாமங்கலம் ஆற்றுப்பகுதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீரமங்கலம்

கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி ேகாவிலில் உள்ள வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் சண்முகநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதேபோல சேந்தன்குடி-நகரம் பாலசுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. மேலும் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்