வெறிநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் சாவு

தென்னிலை அருகே வெறிநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் இறந்துள்ளன. ஆடுகளை சிறுத்தை புலி கடித்ததாக தகவல் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-20 18:30 GMT

6 ஆடுகள் சாவு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள தளிக்கோட்டையை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 63). இவர் விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மாலை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று காலை மீண்டும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக பட்டிக்கு சென்றுள்ளார்.

பட்டியில் போய் பார்த்தபோது 6 செம்மறி ஆடுகளை சிறுத்தை புலி கடித்து கொன்று விட்டது என நினைத்துள்ளார். கடந்த சில தினங்களாக இந்தப் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து சிறுத்தை புலி அந்தப் பகுதியில் வந்து கடித்து விட்டதாக நினைத்து பொதுமக்களும், விவசாயிகளும் கடும் பீதியில் இருந்துள்ளனர்.

மருத்துவக்குழுவினர் உடல் கூறு ஆய்வு

இதுகுறித்து சிதம்பரம் தென்னிலை போலீசாருக்கும், வனச்சரகர்களுக்கும் தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் சரவணன் தலைமையில், வனத்துறை கால்நடை டாக்டர் பிரகாஷ் மற்றும் மருத்துவக்குழுவினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மருத்துவக்குழுவினர் அந்த இடத்திலேயே இறந்த செம்மறி ஆடுகளை உடல் கூறு ஆய்வு செய்து பார்த்தனர். அதில் செம்மறி ஆடுகளை சிறுத்தை புலி கடிக்கவில்லை. வெறி நாய்கள் கடித்ததில் தான் இறந்துள்ளது என தெரியவந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், சிறுத்தை புலியை கண்ணால் பார்த்தால் மட்டும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், மீறியும் ஏதேனும் விலங்கை பார்த்து விட்டு சிறுத்தை புலி என்று தகவல் சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்