திருப்பூரில் கடை உரிமையாளரை தாக்கி ரூ.16 லட்சம் கொள்ளை: பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது - ரூ.11¾ லட்சம் மீட்பு
திருப்பூரில் வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.;
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ்மந்த்சிங் (வயது 45). இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் பின்புறம் காமாட்சியம்மன் கோவில் வீதியில் வணிகவளாக கட்டிடத்தின் முதல் மாடியில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடையை நடத்தி வருகிறார். அந்த வீதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி இரவு 7½ மணி அளவில் முகமூடி அணிந்த 4 பேர், ஹஜ்மந்த் சிங் கடைக்குள் திபுதிபுவென புகுந்தனர். கடைக்குள் ஹஜ்மந்த் சிங் மட்டும் இருந்தார். பெரிய கத்தியை காட்டிய கும்பல், பணத்தை எடுக்குமாறு மிரட்டி அவரை தாக்கியுள்ளனர். கடை லாக்கரில் இருந்த ரூ.16 லட்சம் மற்றும் 4 செல்போன்களை கொள்ளையடித்துவிட்டு 4 பேரும் வெளியே தப்பி ஓடினார்கள்.
ஹஜ்மந்த் சிங் பின்னால் ஓடிச்சென்று பார்த்தபோது ஏற்கனவே ரோட்டில் 3 பேர் காரில் தயாராக காத்திருந்தனர். முகமூடி அணிந்த 4 பேரும் சேர்ந்து மொத்தம் 7 பேரும் அந்த காரில் ஏறி தப்பினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
கடைக்குள் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டனர். சம்பந்தப்பட்ட காரின் அடையாளத்தை போலீசார் தெரிவித்து மாநகர சோதனை சாவடிகளை உஷார்படுத்தினார்கள். இந்தநிலையில் பல்லடம் ரோடு வித்யாலயம் அருகே கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் அனாதையாக நின்றது. அந்த காரை கைப்பற்றி விசாரித்தபோது, கொள்ளையர்கள் தப்பிய காரின் பின்னால் இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் சென்றனர். இதை கொள்ளையர்கள் கவனித்து தங்களை பின்தொடர்ந்து வருவதாக நினைத்து காரை நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
இதை அங்கிருந்தவர்கள் கவனித்து திரண்டதால் காரை விட்டுவிட்டு கொள்ளையர்கள் பிரிந்து சென்றது அங்குள்ள வீடியோ கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து காரில் தடயங்களை சேகரித்தனர். காருக்குள் பெரிய கத்திகள், போலீஸ் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஸ்டிக்கர் இருந்தது. காரின் பதிவு எண்ணை பார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. காரை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த காரை திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்துள்ள ஜெயபாண்டி (30) என்பவர் வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தனது உறவினரான சிவகங்கையை சேர்ந்த சக்திவேல் (28) என்பவருக்கு காரை வாடகைக்கு எடுத்துக்கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவை, சிவகங்கையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்த 20 மணி நேரத்துக்குள் கோவையில் 2 பேரை தனிப்படை போலீசார் மடக்கினார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை பிடித்தனர். மொத்தம் 6 பேரிடம் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
சிவகங்கையை சேர்ந்த வாசு (30) என்பவர் திருப்பூரில் ஓட்டல் வைத்துள்ள மகாவீர் என்ற ராஜஸ்தான் மாநிலத்தவரிடம் டிரைவராக வேலை செய்துள்ளார். அப்போது கணக்கில் வராத பணத்தை, ஹஜ்மந்த் சிங் மூலமாக வெளிமாநிலங்களுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். இதற்காக ஹஜ்மந்த் சிங் கமிஷன் பெற்று இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஹஜ்மந்த் சிங்கிடம் பணம் அதிகளவில் புழங்குவதை வாசு பார்த்துள்ளார். இதை ஜெயபாண்டியிடம் தெரிவித்துள்ளார்.
ஜெயபாண்டி தனது உறவினரான சக்திவேலிடம் தெரிவிக்க, கணக்கில் வராத பணம் என்பதால் ஹஜ்மந்த் சிங்கிடம் கொள்ளையடித்தால் போலீசில் அவர் புகார் தெரிவிக்க மாட்டார் என்று நினைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சக்திவேல் தனது நண்பர்களான சிவகங்கையை சேர்ந்த சிவமணி (20), அழகர்சாமி (35), வாசு, தவம் (40) ஆகியோருடன் வாடகை காரில் வந்து கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையடித்த பணத்தை பிரித்து கோவாவுக்கு சுற்றுலா சென்று ஜாலியாக இருக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சக்திவேலின் மனைவி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் மகப்பேறு விடுப்பில் உள்ளார். சக்திவேல் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று தெற்கு போலீசார் ஜெயபாண்டி, சிவமணி, அழகர்சாமி, சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் 5 செல்போன்கள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த 20 மணி நேரத்துக்குள் கொள்ளையர்களை பிடித்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.
இந்த சம்பவத்தில் கைதான வாசு, தவம் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம்
ரூ.16 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள், தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்ய வாட்ஸ்-அப் மூலமாக பேசியுள்ளனர். செல்போன் சிக்னலை வைத்து போலீசார் பிடிப்பதை தவிர்க்கும் வகையில் தனித்தனியாக மோடம் வைத்து வைபை மூலமாக இன்டர்நெட் வசதியோடு இவர்கள் பேசி வந்துள்ளனர். இருப்பினும் போலீசார் திறம்பட செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்ததாக தெரிவித்தனர்.