பட்டாசு பதுக்கிய 6 பேர் கைது

சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-02 19:15 GMT

சிவகாசி, 

சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

சிவகாசி சப்-இன்ஸ்பெக்டர் மொய்தீன் அப்துல்காதர் மற்றும் போலீசார் நாரணாபுரம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சரஸ்வதி நகர் பகுதியில் ஒரு செட்டில் அட்டை பெட்டிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து பாறைப்பட்டியை சேர்ந்த அய்யலுசாமி மகன் மாரிசெல்வம் (வயது 41) என்பவரை கைது செய்தனர். இதேபோல் போலீசார் பாறைப்பட்டியில் உள்ள பாலசுப்பிரமணியன் (39) என்பவரின் வீட்டின் பின்புறம் சோதனை செய்தனர். அப்போது அங்கு 4 சாக்கு மூடைகளில் எளிதில் தீப்பிடிக்க கூடிய போட்டோ சூட் எனப்படும் பட்டாசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.18 ஆயிரம் ஆகும். இதனை பறிமுதல் செய்து பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் விஸ்வநத்தம் விநாயகர் காலனியை சேர்ந்த லட்சுமணன் (42) என்பவர் உரிய அனுமதியின்றி ரூ.4,500 மதிப்புள்ள வெடிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து லட்சுமணனை கைது செய்தனர்.

சிவகாசி தாலுகாவில் உள்ள எரிச்சநத்தம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் அதே பகுதியில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு அனுமதியின்றி ஷாட் வகை பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து எம்.புதுப்பட்டி போலீசில் மனோகரன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பிரவீன் (28), தங்கேஸ்வரன் (32), மணி (46) ஆகியோரை போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்