கர்ப்பிணி உள்பட 6 பேர் லிப்டில் சிக்கி தவிப்பு

கர்ப்பிணி உள்பட 6 பேர் லிப்டில் சிக்கி தவித்தனர்.

Update: 2023-06-18 21:21 GMT

லிப்டில் சிக்கிய பெண்கள்

திருச்சி தலைமை தபால் நிலைய சிக்னலில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் செல்லும் வழியில் கல்லுக்குழி பாலம் அருகே டி.இ.எல்.சி. கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முதல்மாடியில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கம்போல் பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த கர்ப்பிணி உள்பட 5 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் தரைதளத்தில் உள்ள லிப்டில் ஏறினர். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் லிப்ட் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் லிப்டுக்குள் சிக்கி இருந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர். உடனடியாக ஆலயத்தில் இருந்தவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

போராடி மீட்டனர்

அவர்கள் விரைந்து வந்து ஜெனரேட்டரை இயக்க முயற்சித்தனர். ஆனால் ஜெனரேட்டர் இயங்கவில்லை. லிப்டை திறக்க முயற்சித்தும் முடியாததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் சத்தியவர்த்தனன் தலைமையிலான வீரர்கள் வாகனத்தில் அங்கு விரைந்து வந்தனர்.

லிப்டுக்குள் சிக்கியவர்களை வெளியே மீட்க முயற்சித்தனர். அரை மணி நேரம் போராடி நவீன கருவி மூலம் லிப்டின் ஒரு பகுதியை நெம்பி உடைத்து, உள்ளே சிக்கி இருந்த சிறுமி மற்றும் 5 பெண்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்