சங்ககிரி அருகே சோகம்நின்ற லாரி மீது கார் மோதியது:ஒரே குடும்பத்தில் 6 பேர் பலிமகள் - மருமகன் சண்டைக்கு சமரசம் பேச வந்த இடத்தில் பரிதாபம்

Update: 2023-09-06 20:34 GMT

சேலம்

நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். மகளுக்கும், மருமகனுக்கும் ஏற்பட்ட குடும்ப சண்டைக்கு சமரசம் செய்ய வந்த இடத்தில் இந்த பரிதாபம் நடந்தது.

மாநகராட்சி டிரைவர்

சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை (வயது 28), இவர் சேலம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகள் பிரியாவுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிரியாவுக்கும், கணவர் ராஜதுரைக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இது குறித்து ராஜதுரை, குட்டப்பாளையத்தில் வசித்த தனது மாமனார் பழனிசாமி, மாமியார் பாப்பாத்தி ஆகியோரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

சமாதானம்

இதையடுத்து மருமகனையும், மகளையும் சமாதானம் செய்து வைக்க அன்று இரவே ஈங்கூர் குட்டப்பாளையத்தில் இருந்து பிரியாவின் தந்தை பழனிசாமி (50), தாயார் பாப்பாத்தி(45), தாய்மாமா ஆறுமுகம் (49), அவருடைய மனைவி மஞ்சுளா (38), தாய்மாமன் மகன் விக்னேஷ் (20), மற்றொரு மாமன் செல்வராஜ் (55) ஆகியோருடன் ஆம்னி காரில் சேலத்துக்கு புறப்பட்டு வந்தனர். காரை விக்னேஷ் ஓட்டினார்.

சேலம் கொண்டலாம்பட்டியில் மருமகன் வீட்டுக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்தனர். அங்கு பிரியா, அவருடைய கணவர் ராஜதுரை இருவரையும் அவர்கள் சமாதானம் செய்தனர். அதன்பிறகு பிரியா, தனது கணவரிடம் ஒரு வாரம் தனது தாயார் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து அவர் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோருடன் காரில் ஏறினார்.

அவர்கள் அங்கிருந்து குட்டப்பாளையத்திற்கு நள்ளிரவு 1.30 மணியளவில் புறப்பட்டு சென்றனர். காரை பிரியாவின் தாய்மாமன் மகன் விக்னேஷ் ஓட்டினார்.

கார் மோதியது

காரின் முன்பக்க இருக்கையில் பழனிசாமியும், பின்னால் பிரியா, குழந்தை சஞ்சனா, மஞ்சுளா, பாப்பாத்தி, ஆறுமுகம், செல்வராஜ் ஆகியோரும் இருந்தனர். சேலத்தில் இருந்து பெருந்துறையை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அதிகாலை 2.30 மணியளவில் சங்ககிரி அருகே உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாகவுண்டனூர் பைபாஸ் அருகே கார் சென்றது.

அந்த பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் அருகே ரோட்டின் இடதுபுறம் எந்தவித முன்எச்சரிக்கை இல்லாமலும் பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரிவிக்க பார்க்கிங் விளக்கு எரிய விடாமலும் சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

லாரி நிற்பதை கவனிக்காமல் விக்னேஷ் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் பிரியாவின் குடும்பத்தினர் சென்ற கார் நின்று கொண்டிருந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

மீட்பு

இதனால் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை காரில் இருந்து மீட்க முயன்றனர்.

அதே நேரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் விபத்து ஏற்பட்டு உள்ளதை அறிந்து உடனடியாக கோவையை நோக்கி அங்கிருந்து ஓட்டிச்சென்று உள்ளார். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு சங்ககிரி போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான காரில் உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்தில் சிக்கிய காரை சாலையோரம் அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

6 பேர் பலி

இதனிடையே சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு படுகாயங்களுடன் கொண்டு வரப்பட்டவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் படுகாயம் அடைந்த பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், குழந்தை சஞ்சனா ஆகிய 6 பேரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. பிரியாவுக்கு 2 கைகளிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

காரை ஓட்டி வந்த விக்னேசுக்கு தலை மற்றும் கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரி டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் விசாரணையில், சாலையோரம் லாரியை நிறுத்தி இருந்தவர் டிரைவர் ஜெகன்பாபு என தெரியவந்தது. அவரை கோவை அருகே போலீசார் கைது செய்து சங்ககிரிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், சங்ககிரி உதவி கலெக்டர் தணிகாசலம், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் அறிவுடைநம்பி ஆகியோர் சம்பவ இடத்துக்கு ெசன்று பார்வையிட்டனர். பின்னர் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கலெக்டர் கார்மேகம், நேரில் சென்று, விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கலெக்டர் எச்சரிக்கை

மேலும் விபத்தில் காயம் அடைந்த பிரியா, விக்னேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கார்மேகம் கூறினார்.

நேற்று அதிகாலையில் நின்ற லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் சங்ககிரி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்