பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 6 பேர் கைது
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்பட மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி ஊட்டி நகர மத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊட்டி மார்க்கெட்டில் நொண்டிமேடு பகுதியை சேர்ந்த பரூக் பாட்ஷா, மேத்யூ ஆகிய 2 பேர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆபாச வார்த்தைளை பேசியதாக தெரிகிறது. மேலும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக சோலூர் சேலக்கல் பகுதியை சேர்ந்த செல்வம், அருவங்காடு வள்ளுவர் நகர் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், ஊட்டி படகு இல்லம் பகுதியில் காந்தல் பகுதியை சேர்ந்த சாலமன், கீழ் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா, ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.