வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்காத 6 லட்சம் வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியலில் 6 லட்சம் வாக்காளர்கள் ஆதாரை இணைக்காததால் நாளை முதல் 2 நாட்கள் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்வதோடு, ஆதார் விவரத்தை சேகரிக்கின்றனர்.

Update: 2023-02-23 19:00 GMT


இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தபடி இருக்கிறது. இதற்கிடையே ஒருசில வாக்காளர்கள் இடம் மாறி செல்லும் போது, பழைய இடத்தில் உள்ள வாக்குரிமையை நீக்காமல் புதிதாக விண்ணப்பித்து பட்டியலில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் வாக்காளர் பட்டியலில் ஒருசில வாக்காளர்களுக்கு 2 இடங்களில் வாக்குரிமை இருக்கிறது.

இதுபோன்ற இரட்டை பதிவுகளை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. எனினும் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை தடுக்க முடியவில்லை. எனவே வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்கும் பணி நடக்கிறது. அவ்வாறு ஆதாரை இணைக்கும்பட்சத்தில் ஒருவருக்கு ஒரு இடத்தில் மட்டுமே வாக்குரிமை இருப்பது உறுதி செய்யப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட வாக்காளரிடன் விருப்ப படிவம் பெறப்பட்டு ஆதார் விவரம் இணைக்கப்பட்டு வருகிறது.

6 லட்சம் வாக்காளர்கள்

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 85 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களின் ஆதார் விவரங்களை சேகரிப்பதற்கு, வாக்குச்சாவடி மையங்களில் பலமுறை முகாம்கள் நடத்தப்பட்டன. அதேபோல் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்கு சென்று ஆதார் விவரத்தை சேகரித்தனர்.

ஆனால் கிராமங்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஆதார் விவரங்களை வழங்கிய நிலையில், நகரங்களில் வசிப்பவர்கள் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். கிராமங்களில் 90 சதவீதம் பேரும், நகரங்களில் 70 சதவீதம் பேரும் மட்டுமே ஆதார் விவரத்தை அளித்துள்ளனர். இதன்மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 60 ஆயிரம் பேர் மட்டுமே ஆதார் விவரத்தை வழங்கி, வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர். ஆனால் மீதமுள்ள 6 லட்சத்து 15 ஆயிரம் பேர் ஆதார் விவரத்தை வழங்கவில்லை.

வீடு, வீடாக வரும் அதிகாரிகள்

இதனால் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வாக்காளர்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 117 வாக்குச்சாவடி அலுவலர்கள், ஆதார் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் சேரும்போது ஆதார் விவரங்களை அளித்து இருந்தாலும், அவை பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. முகவரி மற்றும் அடையாள சான்றுக்காக மட்டுமே ஆதார் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் விவரங்களை அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். இதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்