மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 6 பேர் காயம்

காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-06-22 19:16 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு முட்டியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

காரைக்குடி தெற்குத்தெரு பகுதியில் ஆண்டுதோறும் நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். மேலும் அந்தாண்டு மாவட்டத்தில் நடைபெறும் கடைசி மஞ்சுவிரட்டு இந்த மஞ்சுவிரட்டாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக இந்த மஞ்சுவிரட்டு நடக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டு இந்த மஞ்சுவிரட்டு நேற்று காலை தெற்குத்தெரு பகுதியில் உள்ள மஞ்சுவிரட்டு திடலில் நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய இந்த மஞ்சுவிரட்டில் காரைக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த காளைகளும், கல்லல், திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது.

மஞ்சுவிரட்டு திடலில் உள்ள வாடிவாசல் பகுதியில் முதலில் கோவில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு பின்னர் அவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. இதையடுத்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்றனர்.

6 பேர் காயம்

இதில் சில காளைகள் அவர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிக்க வந்த இளைஞர்களை தூக்கி வீசியும், சில காளைகள் அவர்களை துவம்சம் செய்துவிட்டு சீறிப்பாய்ந்தன. மேலும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சிறந்த மாடு பிடிவீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. மாடுகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டை காண ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பார்த்து ரசித்தனர். காரைக்குடி தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்