அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல்
தக்கலை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நிற்காமல் சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் 10 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கினர்.
தக்கலை:
தக்கலை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நிற்காமல் சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் 10 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கினர்.
லாரிகள் பறிமுதல்
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கனிம பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து கல்குளம் தாசில்தார் வினோத் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று காலை 7 மணிக்கு சுங்கான்கடையில் மறைவான இடத்தில் நின்று வாகனங்களை கண்காணித்து கொண்டிருந்தனர்.
அப்போது லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றது. இதனை கண்ட அதிகாரிகள் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 4 லாரிகளில் ஜல்லி மற்றும் எம்.சான்ட் மணல் இருப்பதை பார்த்து ஆய்வு செய்த போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதை கண்டுபிடித்து லாரிகளை பறிமுதல் செய்தனர்.
விரட்டிச் சென்று மடக்கினர்
பின்னர் லாரிகளை மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு மீண்டும் வாகன சோதனைக்காக சென்றனர். அப்போது தோட்டியோடு பகுதியில் 2 லாரிகளை நிறுத்திய போது டிரைவர் நிறுத்தாமல் வேகமாக இரணியல் வழியாக தக்கலை சாலையில் வேகமாக சென்றார்.
ஆனால் அதிகாரிகள் விடாமல் துரத்தினர். 10 கிலோ மீட்டர் தூரம் சென்று 2 லாரிகளையும் மடக்கினர். உடனே டிரைவர்கள், லாரியின் சாவியை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். இதனையடுத்து லாரியை சோதனை செய்த போது அதிலும் அளவுக்கு அதிகமாக எம்.சான்ட் மணல் இருப்பதை கண்டு தாசில்தார் வினோத் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதைதொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவர்களை வரவழைத்து லாரிகளை பறிமுதல் செய்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.