6 மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சுருக்குமடி வலை பிரச்சினைக்கு தீர்வு காண 6 மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-08-03 18:45 GMT

பொறையாறு:

சுருக்குமடி வலை பிரச்சினைக்கு தீர்வு காண 6 மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுருக்குமடி வலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த 3 பேரையும் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம மீனவர்கள் சிறை பிடித்து தரங்கம்பாடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் பொறையாறு போலீசார் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு பொறையாறு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அந்த படகில் இருந்த மீன்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் தரங்கம்பாடியில் சுருக்கு வலை பயன்பாட்டை முற்றிலும் தடை செய்வது தொடர்பாக தரங்கம்பாடி, சின்னூர் பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர்குப்பம், சாவடி குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், கூழையாறு, சின்னகொட்டாய்மேடு மற்றும் கொடியம்பாளையம் ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில் சுருக்கு மடி வலை சம்பந்தமாக விரைவில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், மற்றும் காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவக்கிராம மீனவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 18 மீனவ கிராம மீனவர்களும் மீன்பிடிக்க தொழிலுக்கு செல்லாமல் தொழில் மறியல் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சுருக்கு வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் இரண்டாவது நாளாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்