1½ ஆண்டுகளில், தாட்கோ மூலம் 714 பேருக்கு ரூ.6 கோடியே 22 லட்சம் மானியத்துடன் வங்கிக்கடன்
ஈரோடு மாவட்டத்தில் 1½ ஆண்டுகளில் 714 பேருக்கு ரூ.6 கோடியே 22 லட்சம் மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 1½ ஆண்டுகளில் 714 பேருக்கு ரூ.6 கோடியே 22 லட்சம் மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
தாட்கோ திட்டங்கள்
தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்வு மேம்பாடு அடையும் வகையில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) இயங்கி வருகிறது.
ஈரோட்டில் தாட்கோ அலுவலகம் ஈரோடு கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் 6-வது தளத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களிலும் நிதி வழங்கப்படுகிறது.
714 பேருக்கு நிதி
அதன்படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்னர் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1½ ஆண்டுகளில் 714 பேருக்கு வங்கி மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் மொத்தம் ரூ.6 கோடியே 22 லட்சத்து 33 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
அதிகபட்சமாக தொழில் முனைவோர் திட்டங்களின் கீழ் 458 பேர் வங்கிக்கடன் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் ரூ.4 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரம் மானியம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிக்கடன்
தாட்கோ மூலம் வங்கிக்கடன் பெற்று தொழில் தொடங்கி நடத்திவரும் இந்திராணி என்ற பெண் கூறியதாவது:-
எனது ஊர் பவானி தாலுகாவுக்குட்பட்ட வரதநல்லூர் கிராமமாகும். நான் பி.எஸ்.சி. பட்டம் பெற்று இருக்கிறேன். நான் ஆடை உற்பத்தியில் அதிக ஆர்வமாக இருந்தேன். இதற்கான தொழில் தொடங்க முயற்சி செய்தபோது, தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான தொழில் முனைவோர் திட்டம் குறித்து அறிந்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன். உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்து இருந்தேன். ஒரு சில நாட்களிலேயே நான் நேர்முக தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. எனது திட்ட அறிக்கையை பார்த்து, கடன் உதவிக்கு பரிந்துரை செய்ததன் பேரில் வங்கி மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கடன் உதவி கிடைத்தது. இதில் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் தாட்கோ மானியமாக வந்தது. கடன் தொகையைக்கொண்டு ஆடை உற்பத்தி நிறுவனத்தை நடத்தி 30 பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினர் தொழில்கள் தொடங்கி தாட்கோ அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.