மின்சாரம் தாக்கி 6 மாடுகள் செத்தன
ராமநத்தம் அருகே மின்சாரம் தாக்கி 6 மாடுகள் செத்தன.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி செல்லம்மாள். இவருடைய நிலத்தில் உள்ள வேப்பமரம் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் முறிந்து அந்த வழியாக சென்ற உயரழுத்த மின்கம்பியின் மீது விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்தவர்களான பாலகிருஷ்ணன் மனைவி விஜயா, செல்வன் மகன் வெள்ளைசார்ந்தன், பன்னீர்செல்வம் மகன் பிரவீன்ராஜ், தங்கராசு மனைவி கலா, துரைராஜ் மனைவி பெரியம்மாள் ஆகியோரது மாடுகள் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றபோது, செல்லம்மாளின் நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததாக தெரிகிறது. இதில் 6 மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே செத்தன. இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.