6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-03-15 18:42 GMT

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நச்சுத்தன்மை அதிகமுள்ள 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்கள் தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே மோனோகுரோட்டோபாஸ், புரபோனோபாஸ், அசிபேட், குளோர்பைரிபாஸ், புரபோனோஸ் மற்றும் சைப்பர்மெத்திரின் கலவை, குளோர்பைரிபாஸ் மற்றும் சைபர்மெத்திரின் கலவை ஆகிய அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மனித உயிருக்கும், விலங்குகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லி மருந்து நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயர்மட்ட குழுவின் பரிந்துரைப்படி மேற்குறிப்பிட்டுள்ள 6 அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் 60 நாட்கள் தற்காலிகமாக தடைசெய்து பூச்சிக்கொல்லி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் இம்மாதிரியான பூச்சிக்கொல்லிகளை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் 60 நாட்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.

சட்ட நடவடிக்கை

3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பூச்சிமருந்து சட்டத்தின்படி பதிவு செய்யப்படாததாலும், தற்கொலைகளுக்கு காரணமாக இருப்பதாலும் அதனை அரசு நிரந்தரமாக தடை செய்து உள்ளதால் பூச்சிமருந்து நிறுவனங்களில் மஞ்சள் பாஸ்பரஸ், இருப்பு வைத்திருந்தால் உடனடியாக பூச்சிமருந்து ஆய்வாளர்கள் பூச்சிமருந்து சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே அரசாணையினை மீறி தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள அபாயகரமான பூச்சி மருந்துகளை விற்பனை செய்யும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மீது பூச்சிமருந்து சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் இது குறித்த புகார்களை தங்கள் வட்டார வேளாண்மை அலுவலர் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளரிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்