6 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. ஊட்டியில் இருந்து சென்னை புறப்பட்டார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பினார்.

Update: 2023-03-12 18:45 GMT

ஊட்டி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பினார்.

கவர்னர் வருகை

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 6 நாள் சுற்று பயணமாக கடந்த 7-ந் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்தார். ஊட்டி ராஜ்பவனில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். ராஜ்பவனில் பழங்குடியின மக்களோடு கலந்துரையாடல், பழங்குடியின மக்களின் நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

8-ந் தேதி மகளிர் தினத்தன்று ஊட்டி பெண் வக்கீல்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 9-ந் தேதி கவர்னர் குடும்பத்தினருடன் குந்தா பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுக்கு சென்றார்.

முதுமலை யானைகள் முகாம்

கடந்த 10-ந் தேதி முதுமலை யானைகள் முகாமிற்கு சென்று அங்கிருந்து கேரள மாநிலம் வயநாடு சென்று மீண்டும் இரவு ராஜ்பவனுக்கு திரும்பினார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம், ஊட்டியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டார்.

அப்போது பழங்குடியின வாழ்க்கை வரலாறு குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் புத்தக கண்காட்சி இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் என்று கருத்து பதிவிட்டார். இதன் பின்னர் மீண்டும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று வாகன சவாரி செய்து வனவிலங்குகளை கண்டு ரசித்தார்.

சென்னை புறப்பட்டார்

இந்தநிலையில் தனது 6 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஊட்டி ராஜ் பவன் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக கோவை புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் சென்று வனக் கல்லூரியில் ஓய்வெடுத்து பின்பு கோவை சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவி கோவை வந்து அங்கு ஈஷா யோகா மையத்தை பார்வையிட்டு பின்னர் மதியம் 3 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார். முன்னதாக கவர்னர் கிளம்பியதை தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் கோத்தகிரி சாலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்