தூத்துக்குடியில் 5-ம் ஆண்டு நினைவு தினம்: துப்பாக்கிச்சூட்டில் பலியானோருக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2023-05-22 21:48 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருப்படங்களுக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

உறுதிமொழி ஏற்பு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு நேரில் சென்று மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தனியார் மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் ம.தி.மு.க. சார்பிலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், கரிகளம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதுதவிர பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்