விவசாயிகளிடம் இருந்து ரூ.5.96 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ.5.96 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
சுல்தான்பேட்டை,
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி முதல் கொப்பரை கொள்முதல் தொடங்கியது. அரவை கொப்பரை ஒரு கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று வரை விவசாயிகள் 400 பேரிடம் இருந்து 50 கிலோ எடை கொண்ட 11 ஆயிரத்து 259 மூட்டைகள் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.5 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 405 ஆகும்.
தொடர்ந்து கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. காங்கேயம், வெள்ளக்கோவில் வெளி மார்க்கெட்டை விட, அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் விலை அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது கொப்பரைகளை அருகே உள்ள செஞ்சேரி, நெகமம், பொள்ளாச்சி அரசு கொள்முதல் மையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் இஷாக் கூறியதாவது:-
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற ஜூலை மாதம் 31-ந் தேதிக்குள் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 562.950 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை விற்பனை செய்ய இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி கணக்கு புத்தகம் நகலுடன் முன்பதிவு செய்து உள்ளனர். கொள்முதல் இலக்கை எட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கொப்பரை உற்பத்தி விவசாயிகள் கொப்பரைகளை விற்பனை செய்ய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.