550 விநாயகர் சிலைகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 550 விநாயகர் சிலைகளை அமைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

Update: 2022-08-31 13:17 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 550 விநாயகர் சிலைகளை அமைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து விநாயக பெருமானுக்கு கொலுக் கட்டை, சுண்டல், பாயசம் உள்ளிட்ட நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

550 சிலைகள்

இதைத்தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 550 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் விசுவரூப விநாயகர், படையப்பா விநாயகர் மற்றும் பல்வேறு வாகனங்களில் அமர்ந்த விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகரில் மட்டும் சுமார் 100 விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அன்னை பராசக்தி மடியில் பாலவிநாயகர் அமர்ந்து இருப்பது போன்று அலங்காரம் செய்யப்பட்டு, விநாயகர் காட்சி கொடுத்தார்.

விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் 10 பேர் கொண்ட சிலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சிலைக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விநாயகர் சிலைக்கு அமைக்கப்பட்டு உள்ள பந்தல் பாதுகாப்பான தகரத்தால் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணியில் சுமார் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கடலில் கரைப்பு

விநாயகர் சிலைகள் பூஜைகள் நடத்தி வழிபாடுகள் முடிந்த பிறகு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி தூத்துக்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தபசு மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் சங்கு முக விநாயகர் கடற்கரையில் கரைக்கப்படுகிறது.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பகுதியில் நகர இந்து முன்னணி சார்பில் வ.உ.சி. திடல் சுப்பிரமணியபுரம், தெற்கு நாடார் தெரு, அண்ணா காலனி, ஜீவா நகர், குறிஞ்சி நகர், முத்து நகர், சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 9 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. வ.உ.சி. திடலில் வைக்கப்பட்டுள்ள 7½ அடி உயரம் உள்ள கல்வி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜீவ், நகர பொது செயலாளர் முத்துராஜ், துணை தலைவர் மணி, செயலாளர் சபரிவாசன், பொருளாளர் பட்டுஇசக்கி, பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், தீபக் பிரசாத் உள்பட பலர் கலந்து உள்ளனர்.

அதேபோல், காயாமொழியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கு மாநில பொது செயலாளர் ரவி கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில், ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட துணை செயலாளர் குமார், ஒன்றிய துணை தலைவர் ராஜேஷ், அனுமன் சேனா ஒன்றிய தலைவர் தங்கராஜ், காயாமொழி கிளை தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்