12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம்
தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.
சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், தலைவர் அருண், பொருளாளர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உழைப்பு சுரண்டலை ஊக்குவிக்கும் 12 மணி நேர வேலை சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
55 பேர் கைது
சிலர் வாகனத்தின் முன்புறம் படுத்து மறியல் செய்தார்கள். போராட்டத்தின் ஒரு பகுதியாக 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா நகலை எரித்தனர். அங்கிருந்த தெற்கு போலீசார் அந்த நகலை எரிக்க விடாமல் பறித்தனர்.
இதன் காரணமாக திடீர் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் தெற்கு போலீசார், 2 பெண்கள் உள்பட 55 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.