மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 549 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 549 மனுக்களை பெற்றுக்கொண்டு கலெக்டர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2023-10-10 18:45 GMT

குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 522 மனுக்களையும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 27 மனுக்களையும் பெற்றுக்கொண்ட கலெக்டர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பணிநியமன ஆணை

மேலும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022-2023-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகில் தட்டச்சர்களாகவும், 2020-2021 மற்றும் 2022-2023-ம் ஆண்டுகளில் காலிப்பணியிட மதிப்பீட்டின்படி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்ற 17 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் தட்டச்சர்களாக பணிநியமன ஆணையை வழங்கிய கலெக்டர் தொடர்ந்து நீரில் மூழ்கி பலியான சின்னசேலம் அருகே கருங்குழி கிராமத்தை சேர்ந்த ரவி மகன் ராஜேஷ்(வயது 15), சங்கராபுரம் அருகே உலகுடையாம்பட்டு வரதராஜன் மகன் விஷ்வா(7) ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

நலத்திட்ட உதவி

தொடா்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் செவித்திறன் குறையுடைய 4 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவி ஆகியவற்றை வழங்கிய அவர் அதிக கொடி நாள் வசூல் செய்தமைக்காக கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமாரி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம், சின்னசேலம் விஜயபுரத்தில் வழித்தெரியாமல் தவித்த 1½ வயது குழந்தையை 5 மணி நேரமாக தனது கட்டுப்பாட்டில் பாதுகாத்து வைத்த சிறுவன் கோகுலை பாராட்டி ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்