பேச்சிப்பாறையில் ரூ.5.40 கோடியில் சுற்றுலா திட்டம்

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் வகையில் பேச்சிப்பாறையில் ரூ.5.40 கோடியில் சுற்றுலா திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வன அலுவலர் இளையராஜா கூறினார்.;

Update: 2023-10-07 22:02 GMT

நாகர்கோவில்:

பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் வகையில் பேச்சிப்பாறையில் ரூ.5.40 கோடியில் சுற்றுலா திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வன அலுவலர் இளையராஜா கூறினார்.

சிறந்த வன அலுவலர் விருது

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முதல் மாவட்ட வன அலுவலர்கள் மாநாடும் நடத்தப்பட்டது. அதிலும் இந்த ஆண்டு நடந்த மாநாட்டில் சிறந்த கலெக்டர்களுக்கு விருது வழங்கப்படுவது போல சிறந்த மாவட்ட வன அலுவலர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வன அலுவலர்களும் பங்கேற்ற இந்த மாநாட்டில் 3 மாவட்ட வன அலுவலர்களுக்கு மட்டும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அவர்களில் குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜாவும் ஒருவர். அவருக்கு, குமரி மாவட்டத்தில் 2006 வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடியினர் சமுதாயத்திற்கு நில பட்டா மற்றும் பழங்குடியினர் மக்கள் அனுபவிக்கும் விவசாய நிலத்திற்கு உரிமைக்காக பல முயற்சிகள் மேற்கொண்டதற்காக சிறந்த மாவட்ட வன அலுவலருக்கான விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுபற்றி வன அலுவலர் இளையராஜாவிடம் கேட்டபோது அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

மின்சார இணைப்பு

வனத்துறையை பொறுத்த வரை வனங்கள் பாதுகாப்பு மற்றும் பழங்குடியின மக்களுக்கு பட்டா, மின்சாரம், சாலை வசதி வழங்குவது போன்றவை முக்கியமானதாக கருதப்படுகின்றன. எனவே இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக வன அலுவலர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் சிறந்த வன அலுவலர் விருது எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. பழங்குடியின மக்களுக்கு அதிகமாக பட்டா கொடுத்தது, மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் வசதி கொடுத்தது தொடர்பாக இந்த விருது கிடைத்துள்ளது.

குமரி மாவட்ட வன பகுதிகளில் 47 இடங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். இதில் வெள்ளாம்பி, பூவைகாடு, சிறுகிடத்து காணி மற்றும் மூக்கரைகல் உள்ளிட்ட 18 இடங்களில் வசிக்கும் 488 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 8 இடங்களில் பட்டா வழங்க ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு மட்டும் 198 வீடுகளுக்கு மின்சாரம், 80 வீடுகளுக்கு சோலார் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 200 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

35 வீடுகள்

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வனத்துறை பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதில் ஒருங்கிணைந்த பழங்குடியின உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் குமரி மாவட்ட பழங்குடியினருக்கு 35 வீடுகள் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட 7 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று எதிர்பாா்க்கிறோம். நில உரிமை வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழங்குடியின மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய கூட்டுறவு பண்டக சாலை வேண்டும் என்று கேட்டனர். எனவே இதுதொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று குலசேகரம் காவல் ஸ்தலம் என்ற இடத்தில் கூட்டுறவு பண்டக சாலை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தேன், நல்ல மிளகு உள்ளிட்ட பொருட்களை அங்கே வைத்து விற்பனை செய்து கொள்ளலாம்.

சுற்றுலா திட்டம்

பேச்சிப்பாறை பகுதியில் ரூ.5.40 கோடியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் பழங்குடியின சுற்றுலா திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சுற்றுலா திட்டம் இருக்கும். பேச்சிப்பாறை அணையில் படகு வசதி, சுற்றுலா பயணிகளை பழங்குடியின பகுதிக்கு அழைத்து செல்ல பஸ் வசதி, காட்டேஜ் வசதி உள்ளிட்டவை கொண்டு வரப்படும். இந்த திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன் வந்து ஆய்வு செய்தனர். கூடிய விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்