நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 52 பேர் கைது

நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-05 18:45 GMT

நாகர்கோவில்:

நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலித் உரிமைகள் பாதுகாப்பு

விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட சேரிவிளை, காரவிளை பகுதியில் தலித் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்ததுடன் அங்கிருந்த சுற்றுச்சுவரை இடித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இதுவரை போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநில தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் சரவண கார்த்திகேயன், பாலமுருகன் மற்றும் சேரிவிளை, காரவிளை பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

முற்றுகை- 52 பேர் கைது

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதாக 52 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்