5 மணி நேரத்தில் 52¾ லட்சம் பனை விதைகள் நடப்பட்டன

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 52,81,647 பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனைகளில் இடம்பிடித்தது.

Update: 2022-10-03 18:05 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 52,81,647 பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனைகளில் இடம்பிடித்தது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகளை நட மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டியிருந்தது. அதன்படி நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாலாஜா ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பசுமை தமிழகம் திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுக்குள் பசுமை பரப்பினை 33 சதவீதமாக உயர்த்திட மரம் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.‌ இதன் கீழ் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. பாரம்பரிய பனை மரங்கள் நிலத்தடி நீரை சேமித்து வறட்சிக்காலத்தில் உதவியாக இருக்கும்.

பனை மரத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன். மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள 6 புதிய மாவட்டங்களுக்கான மருத்துவ கல்லூரி பட்டியலில் முதலாவதாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கூடிய விரைவில் புதிய மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திமிரி ஒன்றியம் ஆரூர் ஊராட்சி‌ கன்னிகாபுரத்தில் 70 ஆயிரம் பனை விதைகள், ஆற்காடு ஒன்றியம் கீராம்பாடி ஊராட்சியில் 10 ஆயிரத்து 600 பனை விதைகள், வாலாஜா ஒன்றியம் சீக்கராஜபுரம் ஊராட்சியில் பொன்னை ஆற்றங்கரையோரம் 21 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ததை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

உலக சாதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி எலேட் வேர்ல்ட் ரெக்கார்டு, ஏசியன் ரெக்கார்ட்ஸ் ஆப் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனைகளில் இடம் பெறும் வகையில் இந்த பனை விதைகள் நடவு செய்யும் பணியானது 288 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டிருந்த 880 இடங்களில் 50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

இந்தப் பனை விதைகள் அனைத்தும் ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே கடந்த 3 மாதகாலமாக பொதுமக்கள், தன்னார்வலர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் என சுமார் 80,000 நபர்களால் சேகரிக்கப்பட்டு தற்போது நடப்பட்டது. இந்த நடவு பணிகள் கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளம், ஆற்றங்கரை, கால்வாய் ஓரம் மற்றும் மாநில, கிராம சாலை ஓரம், சீமை கருவேல மரங்களை நீக்கிய பின்னர் தரிசாக உள்ள அரசு நிலங்கள், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

52¾ லட்சம் பனை விதைகள்

இப்பணிகளை 4 உலக சாதனை நிறுவனங்களின் 8 ஆய்வாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். 5 மணி நேரத்தில் 52 லட்சத்து 81 ஆயிரத்து 647 பனை விதைகளை நட்டு சாதனை புரிந்தமைக்காக உலக சாதனை அங்கீகாரம் வழங்கினர். அதற்கான உலக சாதனை சான்றிதழை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இந்த மாபெரும் சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகம், கிராம பஞ்சாயத்து அலுவலர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலெக்டர் பாராட்டினார்.

இந்த உலக சாதனை இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி மற்றும் ஒன்றியக் குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்