சேலம் கோட்டத்தில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Update: 2023-01-07 19:45 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

பொங்கல் விடுமுறை

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதியும், மாட்டு பொங்கல் 16-ந் தேதியும், உழவர் தினம் 17-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் வசிப்பவர்கள், தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள்.

ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயில் மற்றும் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும், மீண்டும் 17-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்க அந்தந்த போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

500 சிறப்பு பஸ்கள்

இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, ஓசூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சேலம் மண்டலம் சார்பில் சேலம், நாமக்கல்லில் இருந்து 300 சிறப்பு பஸ்களும், தர்மபுரி மண்டலம் சார்பில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்