500 கிலோ குட்கா பறிமுதல்; பெண் உள்பட 4 பேர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்காவை கொண்டு வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.;
ஆந்திர மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாகனங்கள் மூலம் சென்னைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நசரத்பேட்டை போலீசார் திருமழிசை கூட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை மடக்கி சோதனை செய்தபோது அதில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நசரத்பேட்டை போலீசார் லோடு வேனில் வந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது பிடிபட்டவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சம்பூரணம் (வயது 42), அம்பத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (36), சித்தூரை சேர்ந்த ராஜா (23), ரவி (25), என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்காவை கொண்டு வந்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 500 கிலோ குட்கா, லோடு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.