கம்பத்தில் 50 ஆண்டுகளாகசாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நகருக்குள் மாற்று இடம் வேண்டும்:கலெக்டரிடம் கோரிக்கை

கம்பத்தில் 50 ஆண்டுகளாக சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு, நகருக்குள் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-04-10 18:45 GMT

மாற்று இடம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கம்பம் நகராட்சி கவுன்சிலர் சுமதி தலைமையில், கம்பம் நகர சின்னவாய்க்கால் சாலையோரம் வசிக்கும் மக்கள் வந்தனர்.

அந்த மக்கள் கொடுத்த மனுவில், "கம்பத்தில் சாலையோரம் குடிசை அமைத்து 68 குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருகிறோம். நகராட்சி நிர்வாகத்தினர் எங்கள் வீடுகளை காலி செய்யச் சொல்கின்றனர். எங்களை கம்பத்தில் இருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ள தம்மனம்பட்டிக்கு போகச் சொல்கிறார்கள். அங்கு சென்றால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எங்களுக்கு கம்பம் நகரில் மாற்று இடம் கொடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

ஊராட்சியில் முறைகேடு

போடி அருகே காமராஜபுரத்தை சேர்ந்த நடராஜன் கொடுத்த மனுவில், "கோடாங்கிபட்டியில் உள்ள சிப்பிலிச்சேரி கண்மாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அளவீடு செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அளவீடு செய்யவில்லை. எனவே அளவீடு பணிகள் மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

பெரியகுளம் அருகே டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 6 பேர் கொடுத்த மனுவில், "டி.வாடிப்பட்டி ஊராட்சியில் முறைகேடுகள் நடந்து வருகிறது. தண்ணீர் தொட்டி 2 ஆண்டாக சுத்தம் செய்யப்படவில்லை. பொது கழிப்பறை பராமரிப்பு செய்யப்படவில்லை. ஊரக வேலை பணிகளில் குளறுபடிகள் நடக்கின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் வார்டு உறுப்பினர்கள் 6 பேரும் பதவியை ராஜினாமா செய்வோம்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்