விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்காக அரசு பஸ்களில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவது போல சென்னையில் இருந்தும் பலர் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.

Update: 2022-12-31 06:34 GMT

கோப்புப்படம் 

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாளையுடன் முடிகிறது. 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி விட்டு நாளை (1-ந்தேதி) வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புகிறார்கள்.

9 நாட்கள் விடுமுறை முடிந்து பெரும்பாலானவர்கள் நாளை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வார்கள். இதனால் பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டப் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன. மக்களின் தேவை அதிகரித்ததால் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆம்னி பஸ்கள் நிரம்பி விட்டன. இதையடுத்து அரசு சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நாளை 500 சிறப்பு பஸ்களும், திங்கட்கிழமை 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

வெளியூர்களில் இருந்து வழக்கமாக சென்னைக்கு 2,100 பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் தேவையைக் கருதி கூடுதலாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் மீண்டும் சென்னை திரும்புவார்கள். அதன் அடிப்படையில் அனைத்து போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் சென்னைக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டதால் இன்று முதல் திங்கட்கிழமை வரை பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இன்று பயணம் செய்ய 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப மட்டும் 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். நாளைய பயணத்திற்கு 22 ஆயிரம் பேரும், 2-ந்தேதிக்கு 10 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவது போல இங்கிருந்தும் பலர் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர். அதனால் இன்று முதல் 3 நாட்கள் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்