திருட்டு, தொலைந்து போன 50 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன 50 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Update: 2023-10-25 18:45 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன 50 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

பணம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுமாறன். இவர் பணப்பரிமாற்றம் செய்யும் செயலி (ஆப்) ஒன்றின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொடர்பு நம்பரை இணையதளத்தில் இருந்து எடுத்துள்ளார். அந்த எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசினார்.

அப்போது அதில் பேசிய நபர், ரகுமாறனுக்கு செல்போன் செயலி ஒன்றை அனுப்பி, அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தன்னிடம் பேசுவது வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி என நினைத்த அவர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது. அதைத்தொடர்ந்து தன்னிடம் பேசியது மர்மநபர் என்று அவருக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து ரகுமாறன் இழந்த ரூ.20 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். அந்த பணத்தை ரகுமாறனிடம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஒப்படைத்தார்.

செல்போன்கள் ஒப்படைப்பு

மேலும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செல்போன்கள் திருட்டு மற்றும் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டனர்.

அந்த செல்போன்களும் உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்