நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை

Update: 2023-06-01 19:30 GMT

சேலத்தில் நூல் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற 2 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நூல் வியாபாரி

சேலம் மரவனேரி 7-வது குறுக்குத்தெரு சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 65), நூல் வியாபாரி. இவருடைய மனைவி மல்லிகா (62). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். திருநாவுக்கரசு தம்பதியும், அவருடைய மகன்களும் தனித்தனியே அம்மாபேட்டை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு சேலம் சூரமங்கலத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு தூங்க சென்றனர். முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லும் போது மல்லிகா அணிந்து சென்ற நகைகளை கழற்றி பீரோவில் வைக்காமல் சிகை அலங்கார பெட்டியின் மேலேயே நகை பெட்டியை வைத்து உள்ளார். மொத்தம் 50½ பவுன் நகைகளை அங்கேயே வைத்துவிட்டு இருவரும் தூங்கினர்.

திடுக்கிட்டு எழுந்தார்

இந்த நிலையில் அதிகாலையில் மர்ம நபர்கள், திருநாவுக்கரசு வீட்டின் பின்பக்க சுவரில் ஏறி உள்ளே குதித்தனர். பின்னர் வீட்டின் உள்பக்க பூட்டை திறக்க முயன்றனர். முடியாததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது கணவன், மனைவி இருவரும் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து பணம் கொள்ளையடிக்க நினைத்து அதன் அருகே சென்றனர்.

அங்கு பீரோவின் அருகில் ஒரு பெட்டி இருப்பதை பார்த்தனர். பின்னர் ஒருவர் மட்டும் நைசாக நடந்து சென்று அந்த பெட்டியை திறந்து பார்த்த போது அதில் தங்க நகைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பெட்டியை எடுக்கும் போது சத்தம் கேட்டு மல்லிகா திடுக்கிட்டு எழுந்தார்.

தப்பி ஓட்டம்

அப்போது பீரோவின் அருகே ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் நகை பெட்டியை தூக்கிக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் இந்த துணிகர சம்பவம் குறித்து மல்லிகா தனது மகன்களின் செல்போன்களுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கு வந்து பார்த்தனர்.

இது குறித்து அவர்கள் அஸ்தம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல் தலைமையில், உதவி கமிஷனர்கள் பாபு, அசோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளை நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நகை வைக்கப்பட்டு இருந்த கதவு, பீரோ ஆகிய இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மொத்தம் 50½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

அலங்கார பெட்டி

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

கணவன், மனைவி இருவரும் திருமண விழாவிற்கு செல்வதை கொள்ளையர்கள் நோட்டமிட்டு இருக்கலாம். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து இருக்க மாட்டார் என்ற எண்ணத்தில் கொள்ளையர்கள் வந்து உள்ளனர். ஆனால் வீட்டின் மெயின் கதவு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த அவர்கள் பின்பக்கமாக வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதித்து நைசாக நடந்து பிரதான கதவு பக்கம் வந்தனர்.

பின்னர் சிரமப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், சிகை அலங்கார பெட்டியின் மீது நகை பெட்டி இருந்ததை தெரிந்ததும், சிரமம் இன்றி நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். அதாவது காலையில் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதால். அதற்குள் நகைகளை பீரோவில் ஏன் வைக்க வேண்டும் என்று நினைத்த மல்லிகா, அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றி அவற்றை நகைப்பெட்டியில் வைத்து அதை, படுக்கை அறையின் அருகில் உள்ள மேக்கப் பெட்டியின் மேல் வைத்து விட்டு தூங்கி உள்ளார்.

பரபரப்பு

இது நகைகளை கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு வசதியாக இருந்து உள்ளது. வீட்டில் பதிவாகி உள்ள கைரேகைகளை வைத்து பார்க்கும் போது கொள்ளையர்கள் 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. எனவே நகைகளை கொள்ளையடித்து சென்ற 2 கொள்ளையர்களை தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

சேலத்தில் அதிகாலையில் நூல் வியாபாரி வீட்டில் 50½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்