ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-20 13:38 GMT

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. இதனை உண்மை என்று நம்பி முதலீடு செய்தவர்களின் பணம் பறிபோனது.

இந்த நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான நடிகர் ரூசோவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மேலும் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

61 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்; 22 கார்கள், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.96 கோடி டெபாசிட், ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன

Tags:    

மேலும் செய்திகள்