ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சினிமா பாணியில் லோடு வேனில் கடத்திய ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சினிமா பாணியில் லோடு வேனில் கடத்திய ரூ.50 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.;

Update:2023-01-26 12:02 IST

சென்னை முத்தியால்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு ஸ்டான்லி ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

ஆனால் லோடு வேன் காலியாக இருந்தது. அதன் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர். 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், 3 பேரையும் லோடு வேனுடன் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று லோடு வேனை முழுமையாக சோதனை செய்தனர்.

அதில் காலியான லோடு வேனில், 'புஷ்பா' சினிமா பாணியில் டிரைவர் இருக்கையின் முன்பகுதியில் 25 பண்டலாக 50 கிலோ கஞ்சாவை நூதன முறையில் பதுக்கி கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அணில்குமார் (வயது 24), உப்பூல ரெட்டி அஞ்சி (34), கொண்டல் ரெட்டி (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

இதேபோல் கொருக்குப்பேட்டை சீனிவாசபுரம் ெரயில்வே கேட் அருகே 12½ கிலோ கஞ்சாவை பதுக்கி விற்க முயன்ற பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த துர்காதேவி (27), மண்ணடியைச் சேர்ந்த சந்தோஷ் (24) ஆனந்தி என்ற ஹேமா (20), செல்வம் என்ற சிட்டிசன் (21), உமா (39) ஆகிய 3 பெண்கள் உள்பட 5 பேரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியில் 1½ கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த அதே பகுதியைச் சேர்ந்த தாமஸ் (35), கொடுங்கையூரைச் சேர்ந்த தானு (23) ஆகியோரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்