தனியார் நிதி நிறுவனம் ரூ.50 கோடி மோசடி

வேலூரில் பொதுமக்களிடம் ரூ.50 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முகவர்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2023-05-10 12:46 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக வழங்கினர்.

இதில் பெறப்பட்ட மனுக்கள் மீது சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் விசாரணை நடத்தினார். சில மனுக்களை அந்தந்த பிரிவு போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார். சில மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சில மனுக்களை மறுவிசாரணை செய்யவும் உத்தரவிட்டார்.

நிதி நிறுவனம்

தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முகவர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து அவர்கள் கூறியதாவது:-

சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தின், வேலூர் கிளை அலுவலக கட்டுப்பாட்டில் நாங்கள் முகவர்களாக செயல்பட்டு வந்தோம். 2010-ம் ஆண்டுக்காலக்கட்டத்தில் பொதுமக்களிடம் பணம் பெற்று நிதி நிறுவனத்தில் செலுத்தினோம். அதாவது, பொதுமக்கள் ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை அவர்களது வசதிக்கு ஏற்ப தவணை முறையில் பணத்தை கொடுப்பவார்கள். அதை நிறுவனத்தில் செலுத்துவோம்.

6 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் செலுத்திய பணத்தில் இருந்து கூடுதலாக பணம் சேர்த்து பொதுமக்களிடம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரூ.50 கோடி மோசடி

இதை நம்பிய ஏராளமான பொதுமக்களும் அந்த நிறுவனத்தில் எங்களை போன்ற முகவர்கள் மூலமாக பணம் செலுத்தினர். கிட்டத்தட்ட ரூ.50 கோடி வரை ஏராளமானவர்கள் கொடுத்துள்ளனர். தவணை காலம் முடிந்து பின்னர் அந்த நிறுவனம் பொதுமக்களிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து அலுவலகத்தில் சென்று கேட்டால் எந்தவித பதிலும் முறையாக தெரிவிப்பதில்லை. இதனால் பணம் கொடுத்த மக்கள் எங்களிடம் பிரச்சினை செய்கின்றனர்.

மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து பொதுமக்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்