விதிகளை மீறி வாகனம் ஓட்டிய50 கல்லூரி மாணவர்களுக்கு அபராதம்

நாகர்கோவிலில் ஒரே நாளில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிய கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் 170 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2023-07-13 21:23 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஒரே நாளில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிய கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் 170 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களில் சிலர் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நேற்று மாலையில் கல்லூரி முடியும் நேரத்தில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லசாமி, சுமித், மோகன் மற்றும் போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூ.2½ லட்சம் அபராதம்

அப்போது அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள், பயன்படுத்தக்கூடாத சைலன்சர்களை பயன்படுத்தியவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் என மொத்தம் 50 கல்லூரி மாணவர்களைப் பிடித்து அபராதம் விதித்தனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.1000, அபாயகரமாக, அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்கு ரூ.1000, பயன்படுத்தக்கூடாத சைலன்சரை பயன்படுத்தியதற்கு ரூ.500, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.5 ஆயிரம், அபாயகரமாக, அதிவேகமாக இருசக்க வாகனம் ஓட்டி 2-வது முறையாக சிக்கியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் அபராதம் விதித்தனர். மேலும் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

இதேபோல் நேற்று காலையில் இருந்து மாலை வரை நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் மேலும் 170 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்த னர். எனவே நேற்று ஒரே நாளில் மொத்தம் 220-க்கும் மேற்பட்டோருக்கு அபராதமாக ரூ.2½ லட்சம் வரை விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தெரிவித்தார்.

போலீசாரின் இந்த வாகன சோதனையால் நாகர்கோவில் நகரில் திடீர் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்