50 பயனாளிகளுக்கு 30 சதவீத மானியத்துடன் ரூ.5 கோடி கடனுதவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு 30 சதவீத மானியத்துடன் ரூ. 5 கோடி கடனுதவியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

Update: 2023-05-04 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு 30 சதவீத மானியத்துடன் ரூ. 5 கோடி கடனுதவியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கடனுதவிகளை வழங்கி மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசியதாவது: 2022-23-ம் நிதியாண்டில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் திட்ட இலக்கீடான 61 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடி 68 லட்சம் மானியத்தொகையும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 25 பயனாளிகளுக்கு ரூ.6 கோடி 29 லட்சம் மானியத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.46.33 லட்சம் மானியத்தொகையும், பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.3 கோடியே 51 லட்சம் மானியத்தொகையும், மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது.

பாராட்டு சான்றிதழ்

மேலும், 2023-24ம் நிதியாண்டில் திட்டங்களுக்கு திட்ட இலக்கினைவிட 125 சதவீதத்திற்கு மேல் கடன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்தாண்டு கடனுதவி வழங்குவதில் இலக்கினை எட்டிய 50 வங்கியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நபார்டு வங்கி மேலாளர் அனிஸ்குமார், தாட்கோ மேலாளர் சுசீலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்