சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சேலம்,
கட்டிட தொழிலாளி
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி 5 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித்தருவதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து சிறுமியின் தாய் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்வராஜுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1,500 அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.