சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெட்டிக்கடைக்காரருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பெரியகுளம் வாகம்புளி தெருவை சேர்ந்தவர் ரகீம் என்ற காதர்மைதீன் (வயது 53). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2020-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் கூறினார். சிறுமியின் தாய் இதுகுறித்து கேட்டபோது அவருக்கு காதர்மைதீன் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த காதர்மைதீனை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தேனி மாவட்ட மகளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் குருவராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதர்மைதீனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து காதர்மைதீனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.