தொழில் மைய உதவி இயக்குனருக்கு 5 ஆண்டுகள் சிறை
தொழில் மைய உதவி இயக்குனருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பேப்பர் கப் தயாரிக்கும் தொழில் தொடங்குவதற்கான சான்றிதழ் வழங்க கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தார். இந்த சான்றிதழ் வழங்க அப்போது பணியில் இருந்த உதவி இயக்குனர் சிவக்குமார், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதற்கு அவர் ரூ.2 ஆயிரத்தை சிவக்குமாரிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று கையும், களவுமாக சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகுமாரி ஜெமிரத்னா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிவக்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதைத்தொடர்ந்து சிவக்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.