அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மின் கழிவுகளை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை - மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Update: 2022-11-10 07:09 GMT

மின் கழிவு (மேலாண்மை) விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட மின்கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளை சேகரித்து செயலாக்க முடியும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கைவிடப்பட்ட மின் கழிவுபொருட்களை சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்.

இந்த நிலையில் மின்கழிவுகளை எரித்தல், முறைசாரா வர்த்தகம் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின் கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே இவ்வகையில் மின்கழிவுகளை கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின்படி அந்நிறுவனத்தை மூடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு சேவைகளை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சட்டத்தின் பிரிவு 15-ன் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின் கழிவுகளை எரிப்பதையும், அதில் முறைசாரா வர்த்தகத்தில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்