ஆசிரியை தாக்கியதில் 5 மாணவ- மாணவிகள் காயம்

ஏலகிரி மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 5 மாணவ- மாணவிகள் காயமடைந்தனர். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர்கள் போலீசில்புகார் செய்துள்ளனர்.

Update: 2023-04-20 17:18 GMT

மாணவ- மாணவிகளுக்கு அடி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 135 மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று மூன்றாம் வகுப்பு மாணவ- மாணவிகளை, ஆசிரியை ஆங்கில பாடத்தில் தேர்வு எழுத வைத்துள்ளார். இதனை சரியாக எழுதவில்லை எனக்கூறி பள்ளிக் குழந்தைகளை மூங்கில் கம்பால் கால், தலையில் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. வலி தாங்கமுடியாமல் மாணவ- மாணவிகள் அலறி துடித்துள்ளனர்.

5 பேருக்கு காயம்

மாலையில் பள்ளி முடித்ததும் வீட்டிற்குச் சென்ற மாணவ- மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். தலையிலும், கால்களிலும் காயங்களைப் பார்த்த பெற்றோர்கள், உடனடியாக அவர்களை ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

10-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சசிரேகா, புவிநிலா, தமிழரசன், விசாலினி, பூவரசன் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து பெற்றோர்கள் உடனடியாக ஏலகிரிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஏலகிரி மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-

குழந்தைகளை அடித்த ஆசிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்