தண்டவாளத்தில் டயர் வைத்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
தண்டவாளத்தில் டயர் வைத்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.;
ரெயிலை கவிழ்க்க சதி
கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12634) கடந்த 1-ந்தேதி நள்ளிரவு திருச்சியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1.05 மணிக்கு திருச்சியில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரம் அருகே உள்ள மேலவாளாடி பகுதியில் ரெயில் சென்றபோது, ரெயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் மர்மநபர்கள் வைத்திருந்த லாரி டயர் ரெயிலில் சிக்கியது.
இதனால் ரெயில் நடுவழியில் நின்றதுடன், சில பெட்டிகளின் மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு அங்கிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே இருப்பு பாதை போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
சதிக்கு யார் காரணம்?
மேலும் இதுகுறித்து ஸ்ரீரங்கம் ரெயில்வே இளநிலை பொறியாளர் முத்துக்குமரன் (வயது 34) விருத்தாசலம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயர்களை தண்டவாளத்தில் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி வேலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த மேலவாளாடி பழைய ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்தார்களா? அல்லது தீவிரவாத அமைப்பினர் யாராவது ரெயிலை கவிழ்க்க சதி செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேரிடம் விசாரணை
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சி அருகே மேல வாளாடியில் ரெயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, விபத்து நடந்த விதம் குறித்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் அவருக்கு விளக்கம் அளித்தார். மேலும் ரெயில்வே போலீசார் சார்பில் 2 தனிப்படைகளும், ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஒரு தனிப்படையும், திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.