வாடகை பாக்கி செலுத்தாததால் 5 கடைகளுக்கு சீல்
திருக்கோவிலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடன் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லையெனில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் கீதா தெரிவித்திருந்தார். இருப்பினும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை பாக்கியை சிலர் செலுத்தாமல் இருந்தனர். இந்த நிவைலயில் நேற்று நகராட்சி ஆணையாளர் கீதா தலைமையிலான அதிகாரிகள் நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாதது தொடர்பாக 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் கீதா கூறுகையில், திருக்கோவிலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வாடகை உள்ளிட்ட பல்வேறு இனங்கள் என சுமார் 6 கோடி ரூபாய் அளவுக்கு பாக்கி இருக்கிறது. இதனை உடன் வசூலிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இனி வருங்காலங்களில் மேலும் தீவிர படுத்தப்படும். எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக அலுவலகத்தில் பணத்தை செலுத்த வேண்டும் என்றார்.