தமிழகத்தில் 5 இடங்களில் சதம் அடித்த வெயில்: இளநீர், தர்பூசணி, குளிர்பானங்கள் விற்பனை அமோகம்

தமிழகத்தில் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள். குறிப்பாக வெளியில் செல்பவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

Update: 2023-03-28 13:50 GMT

சென்னை,

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரையிலான இடைபட்ட 25 நாட்கள் நீடிக்கும். அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் இந்த வார்த்தையை வானிலை ஆய்வு மையம் ஏற்பதும் இல்லை. அதுபற்றி எந்த தகவலையும் வெளியிடுவதும் கிடையாது. ஆனால் ஜோதிடம் மற்றும் பஞ்சாங்க கணக்கின்படி இந்த அக்னி நட்சத்திர காலம் கணக்கிடப்படுகிறது. இதில் பஞ்சாங்க கணக்கின்படி, கிருத்திகை நட்சத்திரத்தை நோக்கி சூரியன் பயணிக்கும் காலத்தைதான் அக்னி நட்சத்திர காலம் என்று கூறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். வழக்கமான கோடை காலத்தில் வெயிலின் கொடுமை அதிகரித்து காணப்படும் நிலையில், இந்த கத்தரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கும்.

அந்த வகையில் அக்னி வெயில் தொடங்க இன்னும் 2 இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் வெயில் இப்போதே சுட்டு எரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக உள்ளது. நடப்பாண்டில், அதிகபட்ச அளவாக, வேலூரில் 100 டிகிரியை கடந்து வெயில் பதிவானது. மேலும், அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மே மாதத்தில் தொடங்கும் கத்திரி வெயிலுக்கு முன்பு மார்ச் மாதத்திலேயே வெயில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. ஈரோடு, கரூர், பரமத்திவேலூர்,மதுரை நகரம்& விமான நிலையம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சதம் அடித்தது.

சென்னையில் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள். குறிப்பாக வெளியில் செல்பவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்