அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி: ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அரிசி ஆலைகள்..!

மத்திய அரசு அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-07-16 05:10 GMT

சென்னை:

மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவித்தது. இதை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிசி மொத்த சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் திருப்பூர், பல்லடம் தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சி.எம்.துரைசாமி, தலைமையில் திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் கே.சி.எம்.துரைசாமி கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி மூடைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும்.

நடுத்தர குடும்பம் மட்டுமில்லாமல் தினமும் வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த முறை ஜி.எஸ்.டி. வரி விதித்தபோது தமிழக அரசிடம் எடுத்துக்கூறியதால் நிறுத்தப்பட்டது.

மத்திய அரசு உடனடியாக வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகள் இணைந்து இன்று அனைத்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த வணிகர்கள், அரிசி சில்லறை வணிகர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயத்தில் 125 அரிசி ஆலைகள், தாராபுரத்தில் 40 அரிசி ஆலைகள், திருப்பூரில் 20, அவினாசி, ஊத்துக்குளியில் தலா 10 உள்பட மொத்தம் 205 அரிசி ஆலைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மொத்த வணிகர்கள், சில்லறை வணிகர்கள் இன்று நடக்கும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.

நாளொன்றுக்கு அரிசி ஆலையில் 25 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. கடைகளில் 30 ஆயிரம் டன் அரிசி விற்பனையாகும். அவை வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்